வசந்த விடியல் - 14
சிரித்துக் கொண்டே விழிக்கிறான்
உலகம் வெட்கத்தில் சிவந்து
பொன் நிறத்தில் ஜொலிக்க
பனை மரத்தையும் தனக்குள்
அடக்கிக் காட்டும் பனித்துளி
வெள்ளிமலையாய் ஜொலிக்க
விடிந்து விட்டதா? எனும் ஆவலோடு
வாசலை எட்டிப் பார்த்தேன்
தாயுக்கும் சேயுக்கும் ஆலமரத்து
கிளையில் அன்பின் விழுதுகள்
ஊஞ்சல் ஆடுவதை உற்று நோக்க
தாய் மடியில் விழுந்து விட்டேன்
எத்தனை மடிகள்...
கைப்பிடித்துக் கரும்பலகையில்
வாழ்க்கை ஒளியூட்டும்
எதிர்பார்ப்பில்லா ஆசானின்
துயர் துடைக்க
மண்டியிட்டுக் கிடந்த காலம்
என் வாழ்வின் வசந்த விடியல்தான்
முள்ளின் நுனியில் சிவந்த ரோஜா
இதழ் சிதைந்து விடாமல்
கரம் தாங்கி நிற்கிறது
உறவின் விடியலில்
மனம் இசையாக உருவெடுத்து
மெல்லிய நரம்பில் ஊடுருவி
இதய வாசலைத் தட்டியெழுப்பும்
வசந்த விடியல்தான் வாழ்க்கை!
- த. சித்ரா, ஈச்சம்பூண்டி, காட்டுமன்னார்கோவில்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.