வசந்த விடியல் - 15
எழில்மிகு வாழ்வை யியற்கை வழியில்
பொழில்போ லமைத்துப் புரிந்தால் − செழிப்புறும்
ஏற்றம் மிகையாய் இசைவதற்காய் மாற்று
வழிச்செல்லா வாய்க்கும் வரம்.
அண்ட வுயிர்கள் அனைத்தும் சிறப்பாம்நம்
பிண்டம் பிணியால் பிணையாமல் − உண்டி
அளவை ஒழுங்கா யறிந்தே உயர்வாய்க்
களிப்பீர் அதுவே கடன்.
தேற்ற மணிந்து திறனாய் வகுத்துநல்
ஆற்றலோடு ஆர்த்தல் அறமாகும்− ஊற்றாய்ப்
பிறர்க்குதவும் எண்ணம் பெருக இறையே
இயம்பும் நலனை இனிது.
இன்னலைக் கண்டு துவளாமல் என்றென்றும்
இன்வாழ்வைப் பெற்றுயர எண்ணங்கொள் − நன்னயமாய்த்
தோன்றும் நினைவு துணையாகும் யாவர்க்கும்
வேண்டுவீர் நன்மை விழைந்து.
பற்றைப் பணிவாய்ப் பணத்தில் புகுத்திப்பின்
உற்றோர் ஒதுக்க உறவேது - குற்றமாகும்
கற்றா வருமன்பு காடுவரைச் சூழ்வது
சுற்றத்தார் நட்பின் சுழல்.
அழுக்காறு நீக்கி அகத்தைப் புதுக்கிப்
பழக்கத்தைத் தூவழியில் பண்பாய் −அழுக்கில்
கசப்பற்ற இன்வாழ்வைக் காக்க இனிமேல்
வசந்த விடியல் வரும்.
(நேரிசை வெண்பா)
- மு. சிவசக்தி, தொண்டராம்பட்டு, ஒரத்தநாடு.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.