வசந்த விடியல் - 18
நீலவானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை!
சருகுகள் அசைய ஆற்று நீர்
சலசலக்க மொட்டுகள்
சோம்பல் முறித்து அவிழ
காலைக்கதிரவன் வானப்பெண்ணுக்கு
பொட்டு வைத்தாற் போலத் தோன்றினான்.
பனித்துளியின் மீது பகலவன் பார்வைபட
அழகான பறவைகள் ஒலி எழுப்ப
அதிகாலைப் பனியில்
அதனழகை ரசிக்கிறேன்
சேவல் கூவி கதிரவனை அழைக்க
சிட்டுக் குருவிகள் சிறகை அசைக்க
காக்கைக் கூட்டம் கரைந்து அழைக்க
அகன்றது இருள்...
அழகாய்த் தோன்றியது வசந்த விடியல்!
இந்த விடியல் வாழ்க்கைக்கும்தான்
முட்களின் நடுவில்
முடிவில்லாத பயணங்கள்
நாள்தோறும் உதயமாகும் சூரியனைப்போல்
நாமும் பயனை எதிர்பாராமல் செயல்படுவோம்
நமக்குக் கிடைக்கும் வசந்த விடியல்!!
- சி. சுசிலா, சின்னமனூர்..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.