வசந்த விடியல் - 19
முதுமையுற்ற பெற்றோரைப் பேணிக் காக்க
முணுமுணுக்காத நல்ல மகன் தோன்றிட வேண்டும்
எதுவரினும் மணமுறிவு கொள்ளா ஒத்த
இணையர்கள் இல்வாழ்வில் இணைய வேண்டும்
மது அருந்தா கணவனவன் குடும்பத் தாரை
மனமகிழ நற்சேவை செய்தல் வேண்டும்
குதுகுதுப்பாய் வருகின்ற பசித்த மக்கள்
குறைபோக்கும் கொடையாளர் பெருக வேண்டும்.
நீர்வளமும் பயிர்வளமும் பெருகச் செய்ய
நெஞ்சினிக்கும் மும்மாரி பெய்தல் வேண்டும்
ஏர்வளமும் தேர்வளமும் பெருகி மக்கள்
இன்னலின்றி மகிழ்வுடனே வாழ வேண்டும்
பார்வளமும் நிறைவுபெற சண்டை போடாப்
பண்பான நன்மக்கள் பெருக வேண்டும்
ஊர்வளமும் வந்துசேர மக்கள் எல்லம்
ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கொள்ள வேண்டும்.
நாட்டுமக்கள் குறைதீர்த்தே ஆட்சி செய்ய
நல்லாட்சி மலரவேண்டும்; துன்பம் தந்து
வாட்டுகின்ற நோய் களைய தேவையான
வளமான மருந்துகளும் கிடைக்க வேண்டும்
ஊட்டமளித்(து) உயிர்காக்கும் உழவர் வாழ்வும்
உயர்வடைந்து பயிர்த்தொழில்கள் செழிக்க வேண்டும்
தீட்டில்லா உயர்கல்வி மக்கள் பெற்றுத்
திக்கெல்லாம் தம்புகழை நாட்டவேண்டும்.
- கி. சுப்புராம், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.