வசந்த விடியல் - 24
வருடத்திற்கொரு முறை வந்தால் வசந்த காலம்...
வாழ் நாளெல்லாம் வழித்துணையாய் வந்தால்...
வசந்த விடியல்...!
வசந்த விடியல் வருமா என்பதும் புரியல...
வந்திட வாய்ப்பு இருக்குமா என்பதும் தெரியல...
வந்தேரிகளுக்கு வாழ்வளித்திட தண்ணீர் கொடுப்பாய்...
கொடுப்பதால் கிடைப்பதைத் தின்றிட எவனோ இருப்பான்...
மண்ணின் மைந்தன் மனமுடைந்து
காசு கொடுத்துத் தண்ணீர் குடிப்பான்...
விடியல் வருமா...?
வசந்தம் வருமா...?
மணல்... மணல்... ஆற்றுத் தண்ணிரோடு
மணலும் வரும்...
அள்ளிப்போக அந்நியக் கைக்கூலி கூடவே வரும்...
கரையேறும்... கப்பலில் போகும்...
மண்ணின் மைந்தன்
மல்லாடி மல்லாடி மல்லுக்கு நிற்பான்
மணல் கேட்டு மல்லுக் நிற்பான்...
உள்ளுர் ஜெயிலில் ஓரமாயிருப்பான்...
வண்டியும்போச்சு மாடும் போச்சு...
வரதட்சணையோடு வந்த பொண்ணும் போச்சு...
வாழ்வென்பதே கேள்விக்குறியுமாச்சு...
விடியல் வருமா...?
வசந்தம் வருமா...?
வசந்த விடியல் என்று வருமா...?
இன்னும் ஆயிரம் ஆயிரம்
விடியல் வேணும்...
வசந்த விடியல் வருமா...?
என வாழ்வு இழந்து
காத்திருக்க வேணும்...
வசந்த விடியல் வருமா?
- கவிஞர் பரணி ரமணி, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.