வசந்த விடியல் - 26
நான் எழுதும் ஒவ்வொரு
எழுத்தும் - நம்
வசந்த விடியலாகட்டும்!
கற்க கசடறக் கற்றிடுவோம்
மண்ணில் ஆளுமைத் திறனை
வளர்த்திடுவோம்!
போதையில்லா உலகினைப்
படைத்திடுவோம்!
பேதையைத் தீண்டும் கயவரை
அழித்திடுவோம்!
மதம் கொண்ட மதத்தை
மண்ணில் புதைத்திடுவோம்
மானத் தமிழனாய்
ஒன்றாய் இணைந்திடுவோம்!
தீயவையை என்றும்
ஒழித்திடுவோம்!
தீண்டாமைப் பேயைத் தடமின்றிப்
பொசுக்கிடுவோம்!
ஆலய ஆன்மிகம் வளர்த்திடுவோம்
அன்பு நெஞ்சங்களில் நிறைவாய்
குடிகொள்வோம்!
காசில்லாக் கல்விச் சாலைகள்
பெற்றிடுவோம்
கல்வியில் உலகியல் அறிவு
பெற்றிடுவோம்!
பாரினில் மார்தட்டிக்
கூறிடுவோம்
தமிழன் ஞானம் கூர்மையெனக்
காட்டிடுவோம்!
செம்மொழி, செங்கதிர் கொண்டு
விடியட்டும் விடியட்டும்
வசந்தமாய் விடியட்டும்!
- அ. பாண்டிய மகிழன், மேல்மங்கலம், தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.