வசந்த விடியல் - 29
விடியும் பொழுதும்! முடியும் பொழுதும்!
அடிமண் விளையும் அரும்பொன் போல
மனதில் நிறைவாய் மகிழ்வாய் திகழ்ந்திட
தினமும் உறங்கும் பொழுதினில் மனிதன்
தேடிடும் வேண்டிடும் வசந்த விடியல்!!
தாயின் விடியல் மகனின் பெருமை
தாரத்தின் விடியல் கணவனின் வளமை
குருவின் விடியல் சீடனின் திறமை
படைத்தவன் விடியல் மனிதனின் அருமை
விடியல் தேடி ஓடும் மனிதர்
துடிப்பாய் வேகம் காட்டுதல் நன்று
கொடிதாய் விரட்டும் பேரிடர்தன்னை
இடியொலி காட்டி விரட்டுதல் இனிது
வசந்த விடியல் வாசம் நாளை
வாழ்வில் வருமென ஏங்கிடும் தமிழன்
இசைந்த செந்தமிழ் துணையொடு நாளும்
அசைந்த தென்றலாய் மணம் பெறல் எளிது
வானம் விடியல் தேடவும் இல்லை
வாசல் தேடி மழையும் இல்லை
வயல்வெளி விடியல் இழந்தே நாளும்
அவரவர் வசதிக்குப் போனது கொள்ளை
இனியொரு விடியல் எமக்கும் வேண்டும்
இருமாப்பிலா வெற்றிகள் வேண்டும்
தனியொரு மனிதன் தரணியில் நின்று
இனியொரு விதியினைச் செய்திடல் வேண்டும்
விடியலை நோக்கி! வீரியம் காட்டுவோம்!
கொடியவர் பகைதனை முடித்தே ஓட்டுவோம்
வசந்தங்கள் வரட்டும் வாசல்கள் திறக்கட்டும்
திசைகளும் வாழ்த்தட்டும்! நம் வாழ்வும் செழிக்கட்டும்!!
- மதுரைக் கவிஞன் அ. பாண்டுரங்கன், மதுரை..
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.