வசந்த விடியல் - 3
எந்நாளில் சிசுக்களின் பிரசவிப்பில்
கத்திமுனை தீண்டாதோ - அந்நாளே
பெண்மைக்கு வசந்த விடியல்!
எந்நாளில் ஆண்ட்ராய்டில் தொலையாமல்
அன்பில் தொலைகிறோமோ - அந்நாளே
வாழ்விற்கு வசந்த விடியல்!
எந்நாளில் அனைவரின் கரங்களும்
அட்சயப்பாத்திரம் ஆகின்றதோ - அந்நாளே
வறுமைக்கு வசந்த விடியல்!
எந்நாளில் தொழிலாளியின் வியர்வையில்
பூமித்தாய் நனைகிறாளோ - அந்நாளே
உழைப்பிற்கு வசந்த விடியல்!
எந்நாளில் இளசுகளின் இதயத்தில்
ஈரம் கசிகிறதோ - அந்நாளே
இரக்கத்திற்கு வசந்த விடியல்!
எந்நாளில் பாமரனின் விரலுக்குள்
பேனா சுழல்கிறதோ - அந்நாளே
நாட்டிற்கு வசந்த விடியல்!
எந்நாளில் புரட்சி எனும் தீயில்
தீண்டாமை பொசுங்குகிறதோ - அந்நாளே
மனிதனுக்கு வசந்த விடியல்!
எந்நாளில் பட்டம்பெற்ற கரங்களுக்குள்
பகுத்தறிவு புகுகின்றதோ - அந்நாளே
புரட்சிக்கு வசந்த விடியல்!
எந்நாளில் பெண்மையும் ஆண்மையும்
மனிதத்தால் மலர்கிறதோ - அந்நாளே
உலகிற்கு வசந்த விடியல்!
- கு. சுவாதி, கம்பம், தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.