வசந்த விடியல் - 30
(அந்தாதி வடிவில்)
எந்திர வாழ்க்கை வாழ்ந்திடும் மனிதா
எல்லாம் எனக்கென்ற சுயநலம் பெரிதா
புகழும் பணமும் போதையைத் தருதா
அறநெறிகள் உன்னில் பார்ப்பது அரிதா
அரிதா மனிதனாய்ப் பிறப்பது அரிதா
வாழ்க்கை உனக்கு போதனைத் தருதா
வேண்டும் முன்னேற உன்னில் படிப்பறிவு
நடக்கும் ஒவ்வொன்றும் உனக்கானப் பட்டறிவு
பட்டறிவு சொல்லும் அழகானப் பாடம்
இயல்பாய் இருந்திடு போடாதே வேடம்
எதிர்நீச்சல் போடு பிரச்சினைகள் ஓடும்
முயற்சியால் முன்னேறு நம்பிக்கைக் கூடும்
கூடும் மகிழ்ச்சி மனநிலையைப் பொறுத்தது
தேடல் வாழ்க்கை நம்மைத் துரத்தது
எண்ணம் செயலை பெரியதாய் வைத்திடு
உழைப்பைச் செலுத்தி உலகில் உயர்ந்திடு
உயர்ந்திடு மலையாய் முயன்றிடு அலையாய்
வெல்லும் வாழ்வை ஆக்கிடு கலையாய்
கலங்காமல் இரு சிகரம் தொடு
மழலையாய் மனதை மாற்றியும் விடு
விடு அச்சம்விடு சமூகத்திற்கு அள்ளிக்கொடு
சாதனையை நடு வெற்றித்திலகம் இடு
ஒவ்வொரும் நாளும் வாழ்விடம் பாடம்படி
நாளை வசந்தவிடியல் விடியட்டும் நல்லபடி!
- மு. வா. பாலாசி, சென்னை - 48.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.