வசந்த விடியல் - 31

தெற்கேயிருந்து வீசும் தென்றல் காற்றென
தென்மேற்கேயிருந்து வரும் பருவக் காற்றென
இனிக்கும் தேனாய் இதயம் மகிழும்படி
இனி தேன் துளிகளாய், தேனியில் தேன் மழைதான்!
தேனித் தமிழ்ச் சங்கத்தால் இனி மாதந்தோறும்
தேனாய் இனிக்கப் போகிறது கவியரங்க நிகழ்வு
தமிழரின் கலை, பண்பாடு என்பதோடு
வாழ்விற்கும், வீரத்திற்கும் வருகிறது வசந்த விடியல்!
தேன் தமிழர்களின் வாழ்வில் நல்லதோர் விடியலாய்
வான்புகழ் வள்ளுவம் போல விடியல் விடிய
வசந்தம் அசைந்து வரவில்லை, ஆர்ப்பரித்து வருகிறது!
கன்னித் தமிழருக்குக் கரும்பா இனிக்கப் போகிறது!
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் தமிழரின் கோட்பாடு
தை தையென சலங்கை ஒலிக்க
தமிழர்களின் வீரம், காதல், சாதனை திறன்களுக்கு
தேனீக்களின் கூட்டத்தால் வந்தது வசந்த விடியல்!
உழைக்கச் சலிக்காத உண்மைத் தமிழருக்கு
உயர்வு எனும் இனிய வசந்த விடியல்
புள்ளினம் கூவுதல் போல் விடியலுக்குப் பாட்டிசைக்கும்
தமிழ்ப் பாவாணர்களின் பாடல்களும் இனிக்கும்!
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையின் பிள்ளையாய்த்
தேனித் தமிழ்ச் சங்கம் அமைத்து, தமிழர்களின் புகழ்பாடக்
கவியரங்கம் தொடங்கிக் கொஞ்சும் தமிழில்
வசந்த விடியல் தோன்ற வித்திட்டோர் வாழியவே...!
- கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன், ஆண்டிபட்டி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.