வசந்த விடியல் - 32
தேனியின்
தென்மேற்குப் பருவக் காற்று
கதிரோனின் தேர்க்கால் வழுகும்.
தேனருவிப் பக்கம்...
குமரி முனையின்
கடலில் குளித்தெழும் கதிரொளி
குடந்தை மகிழ்
காவிரிக் காட்டில் தலை துவட்ட...
பாற்கடல் விட்டு
அனந்தசரஸ் குளத்தில்
அனந்த சயன அத்தி வரதர்
நாள்தோறும் நின்றருள...
முன்பு போல் இன்றும்
முல்லைப்பாசன வயல்வெளியில்
முப்போகம் விளைந்திட...
முல்லைப்பெரியாறு தரும் தண்ணீரைத்
தேக்கி வைத்திட...
முண்டாசு கட்டி
வைகையில் தூர் வாரும்
பென்னி குயிக்...
ஒட்டுப் போடா ஆடைகளுடன்
ஓட்டு வீட்டில்...
என் குடும்பம்...
ஆஹா...
வசந்த விடியல்தான்...!
அட,
இதென்ன முகம் சுடுகிறது...
ஓ! விடிந்து விட்டதா?
விழித்தெழுந்தான்
ஏழை விவசாயி...
அவனுக்கு
வசந்த விடியலும்
கனவுதான்!
- முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.