வசந்த விடியல் - 33

நாற்றெடுத்து நட்டு வைப்பான் விவசாயி,
தொட்டு மூடை தூக்கிச் செல்வான் தொழிலாளி,
ஓடி ஓடிச் சுத்தம் செய்வான் உழைப்பாளி,
தொடர்ந்து வேலை பார்த்திடுவான் படைப்பாளி.
நாங்களும் பிறந்தோம் சுழலும் இந்த பூவுலகில்,
நமக்கேதும் உதவிடாது போகும் மனிதர் நம்வழியில்,
விடமுடியாத பள்ளிக்கல்விதான் எங்களுக்கு இல்லை,
ஒடுங்கிவிட்ட மனிதர் எமக்கு ஏதும் உயர்வில்லை.
வானின்மீது என்றோ வந்திடும் மழைமேகம்,
விழும் மழை இப்போதே என
வேண்டிடும் மனம்,
உழைத்திடும் எமக்கு உதவிட எவரும் இல்லை,
உருண்டோடும் பணம் கையில் தங்கியது இல்லை.
யாவர்க்கும் இங்கே தேடுதல் என்பது சில உண்டு,
எவர்க்கும் இங்கே தேவைகள் என்பது பல உண்டு,
உலகினில் எதற்கும் ஏதேனும் உரிய விலை உண்டு,
நமது நெஞ்சினில் தாங்கிடும் உழைப்பே நமக்குண்டு.
மூன்று வேளையும் முழுதாய் உண்டதாய் நினைவில்லை,
நன்றே மக்களை சீராட்டி வளர்த்திட வகையில்லை,
என்ன செய்ய ஏது செய்ய என்பது மட்டும் புரியவில்லை,
எப்போது விடியல் எமக்கு என்பதும் தெரியவில்லை.
ஓடி ஓடியேதான் விடாது நாங்கள் உழைத்திடுவோம்,
ஒருசாண் வயிறை கழுவிட படாதபாடு பட்டிடுவோம்
விழுந்து விட்டால் எங்கும் தூக்கி விடவே ஆளில்லை,
வசந்த விடியல் என்பது எமக்கு இல்லவே இல்லை.
- க. சோ. இராசேந்திரன், உத்தங்குடி, மதுரை - 107.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.