வசந்த விடியல் - 35
வசந்தத்தின் விடியல் தேனாகத்
தேனியில் தானாகக் கொட்டுகிறது
மெல்லப் பருகத்தான் நானும் வந்தேன்...
இந்த விடியலில் கல்லைச் சிற்பமாக்கும்
கலையைக் கற்றுக் கொடுத்து
கல்லைச் சிற்பமாகச் செதுக்குகிறார்கள்
அமைதிப்புறாவே,
உன் சிறகுகளில் இனி
தோட்டாக்கள் வேண்டாம்!
வசந்தத்தின் விடியலைத் தூதுவிடு!
வன்முறைகள் பரந்து விரிந்து
பூமிப்பந்தினைப் பற்றுவதால்
பால்நிலவின் ஒளியில்
அக்கினிப்பிழம்பின் வெப்பம்
பரவி எரிகிறது...
என்று தணியும்...?
இந்த வன்முறை வெறியர்களின்
இரத்த வேட்கை!
வசந்தம் எங்கே இருக்கிறது?
தேடித் தேடிப் பெருகி வளரும்
அன்பிலா? அறிவியலிலா?
அளவிலா செல்வத்திலா?
அல்லது செல்வாக்கிலா?
இல்லை வேதங்கள் ஓதும்
சமயங்களிலா?
இறக்கி வைக்க இடம் தேடி
ஓடி ஓடிக் களைத்த பின்பு
நின்று பார்க்கிறேன்...
வசந்த விடியல் வருமா...?
வன்முறையில்லா வாழ்வை
வழங்குமா...?
- எஸ். விஜயலட்சுமி, போத்தனூர், கோயம்புத்தூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.