வசந்த விடியல் - 36
வெள்ளைப் பூக்களின் நறுமணம் குறைந்து,
வண்ணப் பூக்களின் வாசம் மிகுவதும்
கூட்டுப் புழுக்களின் கூடு உடைத்து,
வண்ணத்துப் பூச்சிகள் சிறகு அசைப்பதுமாய்,
பூத்து விட்டுச் சிரிக்கிறது - இந்த
புத்தம் புது வைகறையின் விடியல்
ஏர் உழும் உழவனுக்கு பயிரோடும்
படிக்கும் மாணவனுக்கு புத்தகத்தோடும்,
மீண்டும் ஒரு சிறகசைப்பை நினைக்கும்
பறவைகளின் ஆனந்தப் பயணத்தின் துவக்கமாய்
கண்முன்னே கனவுலகில் காற்றில் இசைபாடி
கவிதையில் பேர்பாடி பூக்களின் மேல்
சில்லிட்டு நிற்பதாய் பனித்துளிகள் போர்த்தும்
புத்தும் புது காலை… - மண்ணில்
மழைத்துளிகளின் உற்சாகம் கரை புரண்டோடி
தடங்களை வருடிப் பார்ப்பதாய், கதிரவனின்
கதிர்வீச்சில் காற்றோடு கதை பேசும்
கனி மரங்களின் கம்பீரக் காலை…
தன்னம்பிக்கையோடு சிகரம் தொட சின்ன
சின்னதாய் முயற்சிகள் எடுக்கும் காலை…
குழந்தையின் மழலையும் கொஞ்சும் தமிழ்
கீதங்களும் இசையோடு இசைந்தாட - தாவணிகளோடு
மங்கையர் மறிக்கும் விழி பேசும்
மதுரமான மையல் கொள்ளும் மாலை…
இப்படியாய் வந்திடட்டும் வசந்தப் பூக்களோடு
நமக்கான புத்தம் புது விடியல்…
- முனைவர் பி. வித்யா, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.