வசந்த விடியல் - 38
கவியரங்கத்தைக் களைகட்ட வைக்கும்
தலைமைக்கு வணக்கம்
தலைமையை நோக்கிச் சூழ் கொண்டிருக்கும்
பிழையிலாப் பெருமகனார்கள்
அனைவருக்கும் வணக்கம்
பெண்களாகப் பிறப்பதே அரிது - அப்படி
மாதவம் பெற்று வந்த
மாதர் குலத்திற்கும் வணக்கம்.
எங்களுக்கு ‘வசந்த விடியல்’ எனும்
தலைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
வசந்தம் என்பது இளவேனிற் காலம்
விடியல் என்பது வைகறை
அதாவது ‘இளவேனிற்கால வைகறை”
இதனைச் சொல்வதற்கே
இனிமையாய் இருக்கிறது.
இந்த வார்த்தைகளைத் தமிழில் உச்சரிப்பதற்கே
அமுதாய் இனிக்கிறது.
கல்லையும் மண்ணையும்
காண்பதற்கு முன்னாலும்
காடு, மலை, குகைகளில் வசித்த மனிதருக்கு
முன்னால் தோன்றிய தமிழுக்கு
இன்று சோதனை வந்திருக்கிறது.
மொழிகளுக்கெல்லாம் மூத்தவள் என்றும்
வாழ வழி தெரியாதவர்களுக்கு
வழிகாட்டிக் கொண்டு - என்றும்
இளமை மாறாத தமிழ்த்தாயை - இன்று
அவளது மண்ணிலேயே
அவளது முடியைப் பிடித்து இழுத்து
தலைகுனிய வைப்பவர்களுக்குச் சிலர்
சாமரம் வீசுகிறார்கள்...
கொடூரம்... கொடூரம்...
அதை நினைத்தாலே
பட்டாசுச் சரமாக வெடிக்கிறது நம் சரீரம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும்
விழிகளைப் போலிருக்கின்ற தாய்மொழிக்கும்
கலாச்சாரத்திற்கும் தடை விதிப்பவர்கள்
தண்டவாளத்தை விட்டு
ரயில் தவறி விழுந்ததற்குச் சமமல்லவா?
இவர்கள் நடிப்பில் நடிகர்களைக் கூட
பின்னடைவுக்குத் தள்ளும் மன்னர்கள்
இவர்கள் எப்படி பூமியைச் செழிக்க வைக்கும்
‘ஆறு’நடை போடப் போகிறார்கள்?
ஒன்று இரண்டு, மூன்று... என்று
ஆறு எண்களைச் சொல்லி
ஆறு நடை போடலாம் - தொண்டு செய்யும்
ஆற்றலான ஆற்றின் நடை போட முடியாது
இவர்களுக்கெல்லாம் அறியாமை
இவ்வளவு ஆழமாக இருக்கிறதென்றால்
தெரியாமை தேங்கிக் கிடக்கிறதென்றால்
புரியாமை புகுந்திருக்கிறதென்றால்
தீக்குச்சியைப் பொருத்தினாலும்
தீபங்கள் எரிந்தாலும்
ஆதவன் ஒளிர்ந்தாலும்
அழகு நிலா சொலித்தாலும்
எரிமலைகள் தீப்ப்பிழம்பை எரிந்தாலும்
ஆகாயத்தை வெளிச்சமாக்கினாலும்
அவர்கள் இருளில் கிடக்கிறார்கள்
என்பதுதான் உண்மை
இப்படி இருந்தால்
எப்படி வசந்த விடியலைக் காண முடியும்?
நமக்கு எது வசந்தமென்றால்
நமக்கு எது விடியலென்றால்
கொஞ்ச காலம் வந்து செல்லும் இந்த வாழ்க்கையில்
மனிதனை மனிதன் சாப்பிடாத நிலை வேண்டும்
இயலாமையில் இருப்பவர்களுக்குக் கல்வி வேண்டும்
இந்தப் பாரதம் உயர அயராத உழைப்பு வேண்டும்
நாட்டைப் பாதுகாப்பவர்கள் இராணுவ வீரர்கள் என்றால்,
உயிரெனும் இந்தக் கூட்டைக் காப்பவர்கள் விவசாயிகள்
அந்த விவசாயம் விரிவாக்கப்பட வேண்டும்
எங்கு விளைந்தாலும், அது
எல்லோருக்கும் சொந்தமென்ற நிலை
ஏற்பட வேண்டும்
இந்தியாவில், இந்தப்பூமியில்
ஒருவருக்குப் பசியால் உயிர்பிரியும்
கொடுமை நடக்குதென்றால்
அது யாராக இருந்தாலும் சரி
அவர்கள் உலக மக்கள்தொகையிலிருந்து
கழிக்கப்பட வேண்டியவர்களே...
தனியுடைமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டையின்
பாதையில் சென்றால், அதோடு
செட்டிநாட்டுக் கவியரசர் கண்ணதாசன்
கொட்டி வைத்திருக்கின்ற தத்துவ வழியில் சென்றால்
வசந்தம் வசப்படும்
விடியல் என்ற வெளிச்சம்
மனிதகுல வாழ்வாதாரத்தை வகைப்படுத்தும்
வலிமைப்படுத்தும், வளப்படுத்தும் என்பதோடு
வாய்ப்பளித்த தேனித் தமிழ்ச்சங்கத்துக்கு
நன்றி சொல்லி விடைபெறுகிறேன்
வணக்கம்.
- கவிஞர் வெற்றிவேல், தேனி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.