வசந்த விடியல் - 39
புயலுக்குப் பின்அமைதி என்னும் போக்கே
பூமியிலே நம்பிக்கை யளிக்கும் வாக்கே
செயலுக்குச சீதனமே காணும் வெற்றி
சிந்தைக்கு மூலதனம் பேணும் கல்வி
வயலுக்கு உரமிடலே வளத்தைச் சேர்க்கும்
வசந்தத்தை விடியலெனக் காண்ப தற்கு
முயற்சியெனும் சூரியனைக் கொள்ள வேண்டும்
முன்னேற்றம் நம்முன்னே வெளிச்சங் கூட்டும்
தொடுவானம் கற்பனையின் எல்லை நம்முன்
தொலைதூரம் காட்டுகின்ற எல்லை அப்பால்
நடுவானம நகர்ந்துகொண்டே போகும் தோற்றம்
நம்மிலக்கைக் காட்டுகின்ற காட்சி என்றும்
சுடுவான மல்லவாழ்க்கை தென்றல் வீசுஞ்
சோலையெனத் தெரியவரும் நம்பிக கைதான்
கொடுவான வசந்த்தத்து விடியல் காட்டும்
குறைவில்லா வாழ்வதனுள் வெளச்சங் கூட்டும்
ஒருநாளில் மாறிடுமோ வாழ்க்கை தம்முள்
உயர்குணத்தைப் பேணுகின்ற வேட்கை மாறா
வருநாளில் பொதுநலந்தான் கொண்டால் நாளும்
வசந்தமெனும் விடியல்தான் வாராப் போமோ
உருவாகும் தன்னலமே இல்லா மாந்தர்
உழைப்பினிலே உண்டாகும் இன்பம் என்றும்
திருநாளாய்க் கொண்டாட்டம் போட வைக்கும்
திசையெங்கும் வசந்தத்து விடியல் தந்தே
- கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.