வசந்த விடியல் - 37
வானவர் தேரில் வந்து
வரிசையாய் வாசலில் நின்று
பூமகள் மேனியில் என்னை
புகழ்ந்திட வேண்டும் விடியலே...
மழலையர் மகிழ நீயும்
ஆத்திச்சூடி பாடியே நின்றிடாதே
குழந்தைப் பருவம் கடந்தும்
ஆராரோ பாடியேக் கடந்திடாதே
சுத்தத்தமிழ் வீரன் இவனென
சங்கத்தமிழ் வீரத்தில் ஒப்பிடு
கண்ணிமை காத்த மாவீரனை
கண்ணின் முன்னேக் காட்டிவிடு
தோல்வி விரட்டத் துணிந்து வா
தோள் கொடுக்கத் திமிறி வா
தோழனாய்க் கரம் சேர்த்து வா
வாழ்வியல் வசந்தமாய் வா
கீழடி போல எமக்கு
உயர்குடி காட்டிச் செல்
பெருங்குடி மறவன் நானென
மறுபடியும் காட்டிச் செல்
பார் போற்றும் காவலனென
சிந்தனை ஏரோட்டும் நாயகனென
சிறந்த வரலாறாய் எழுந்து
விடிந்திட வேண்டும் வசந்த விடியலே...
- சி. ஜெயபாண்டி, மாரியம்மன் கோவில்பட்டி, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.