வசந்த விடியல் - 5
உண்டும் உண்ணாமலும்வேலைக்குச் சென்று
செல்லும் வழியில் பல தடைகளைக் கடந்து
வெயிலும் மழையும் உடம்பை நனைக்க
பகலெல்லாம் ஓடாய் உழைத்த கணவன்
சோர்ந்து வீடென்னும் கூட்டிற்கு வர
சம்பளம் மொத்தமும் தந்த பின்னும்
தேவைக்கு போதவில்லையென இல்லாள் கூற
கனத்த மனம் மேலும் கனக்க
விடை தரும் விடியல் என்றெண்ணியே
விழி மூடுகின்றான் ஒவ்வொரு இரவும்
கவலைகளை ஓரிடத்தில் ஒத்தி வைத்துவிட்டு
கண்ணீரை விழிகளில் தேக்கி, தலையணையில்
முகம் புதைத்து, அழுகை மறைத்து
விடியல் வந்ததும் எழுந்திரு நீயென
தட்டி எழுப்புகிறாள் இயற்கை அன்னை
பட்சிகளின் கானம் பரவசம் தந்திட
பரிதிக் கதிர்களால் புத்துணர்ச்சி பிறந்திட
தென்றல் காற்றால் தேகம் குளிர்ந்திட
அசையும் இலைகள் அமைதி தந்திட
காணாமல் போனது கவலைகள் அத்தனையும்
மீண்டும் தொடர்கதையாய் அன்றாட அலுவல்கள்
விடை கிடைக்காத விடியல்கள் - ஆனாலும்
வசந்தமே ஒவ்வொரு விடியலும் நமக்கு
புதுப்பொலிவுடனே இயங்கிடச் செய்வதால்...!
- கவிதாயினி தி. இராஜபிரபா, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.