வசந்த விடியல் - 6
அன்றொரு நாளில் வசந்தகாலம் வந்தது;
நன்றென நானும் அசந்தேன்; கனவொன்றில்
சங்கத்தமிழ் கூடல் கண்டேன்; பலரமர்ந்த
சங்கத்தலைவராக தொல்காப்பியரிருந்தார்
திருவள்ளுவரும் கபிலரும் முன்னும்
இருநூறு சங்கப்புலவர்கள் பின்னும்
அரங்கிநிறை கூடலாகக் கூடிய போது
திருவிதாங்கூர் சுந்தரனார் வந்ததைக் கண்டேன்
“தொல்காப்பியத்திலென் நூற்பாக்கள் எத்தனை
சொல்லுங்கள்!: என்றார் தலைவர்; பலவாறு
சொல்லியதை தொல்காப்பியரே மறுதலித்து
சொல்லாதீர் தப்பாக என்றார்.
ஆயிரத்தறு நூற்றுப் பத்தே சரியென்றார்
ஆயகலை கற்ற தொல்காப்பியர்; ஆயிரத்து
ஐநூற்றுத் தொண்ணூற்றைந் தென்றுரைத்த
ஐயர் இளம்பூரணாரைப் பின்பற்றா தீரென்றார்
தமிழிலக்கியச் சீர்கேட்டைப் பார்த்தார்; பாடும்
தமிழ்த்தாய் வாழ்த்தென்று மனோன்மணியப் பாயிரத்தில்
ஆரியப்போல் என்ற தொடர்நீக்கிப் பாடிய
வீரியமில்லா வாழ்த்தையும் கண்டித்தார்;
கண்டித்த காப்பியரை சங்கப் புலவரெலாம்
அண்டிநின்ற போது நானும் கண்விழித்தேன்; ஆளும்
அசகாய சூரரிடம் சொன்னால் வருமா
வசந்த விடியல் நமக்கு?
- அ. இருளப்பன், திருமங்கலம்..
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.