வசந்த விடியல் - 7
தளையெனத் தடைபல தளை தட்டும் வாழ்வினில்
எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள்
அனைத்தையும் மாற்றும் அற்புதப் பேரொளியாய்
வசந்தவிடியலது என் மனவாசலுள் நுழைந்தது
புதுமலரைத் தொடும் உணர்வில்
புதுஉறவாய் எனை வரித்த
வசந்த விடியலதன் வளைக்கரங்களைத் தீண்டியதும்
சித்தம் மகிழ்ந்தது சிந்தையெல்லாம் குளிர்ந்தது
மடைபுகும் புனலெனக் கடைவிரித்தேன் சிறகினை
விடையறியாமலே விரைந்திடும் வாழ்விலே
தடை உடைத்தெழுந்தே உலவினேன் வானிலே
வறண்ட தேகத்தை வருடிடும் தென்றலாய்
வசந்த விடியலது உறவென வந்திடவே
சிறைவிட்டுப் பறந்த கிளியதைப் போலவே
உலகம் கைக்குள் வந்ததாய்
உவகை கொண்டேன்
இரவும் பகலுமாய் இன்பத்தில் திளைத்தேன்
எனை தாழச் செய்த வறுமை ஒழியவே
வாழும் நாளெல்லாம் வசந்தம் வந்திட்டால்
நாளும் ஒருகணமும் நலங்கள் பெருகுமென நம்பினேன்
காலம் பல நீள கடுந்தவங்கள் நான் புரிந்தேன்
மனதுள் வந்த வசந்த விடியலின் கரங்கள் பிடித்தேன்
தோளில் சாய்ந்தேன்
பட்ட பாடுகள் தொலையவோர் பாட்டொன்றிசைத்தேன்
கரங்கள் குவித்தேன்
கருத்தில் இணைத்தேன்
கவலையெல்லாம் தொலைத்தேன்
வசந்த காலத்தளிர் வாசமது
என் வாடிய மனதுள் வீசவே
பொல்லாத வறுமையை பொழுதில் பொசுக்கிடும்
வரங்கள் கிடைத்தது போலவே வாரியனைத்தேன்
அனைத்ததும் அன்பினில் திளைத்திட்ட
வசந்த விடியலது,
இனிவாட்டம் உனக்கில்லையென்று
உற்சாகப்படுத்தியது
உடனே காலில் விழுந்தேன்
உலகின் வறுமையை உடனே அழித்திடுவென
கருணை மனு கொடுத்தேன்
கரங்கள் நீட்டி மனு பெற்ற வசந்தமது
உலகோர் வறுமை நொடியில் மறையவே
பக்குவமாகவே பயணப்படுவேனென்று
பதிலைத் தந்ததும் பறந்தது வானிலே
நானோ
வையகத்தின் வறுமையை ஒழித்துவிட்டு வாவென
வசந்த விடியலை வாசலுக்கு அழைத்து வந்து
வந்தது போல் அனுப்பி வைத்தேன்
வறுமையில் உழலுகின்ற
மக்களின் மன வாட்டத்தை
வசந்தத்தின் விடியலது
நிச்சயம் ஒ(அ)ழிக்குமென்ற அசையாத நம்பிக்கையில்.
- முதுமுனைவர் மு. ஐயப்பன், தூத்துக்குடி
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.