வசந்த விடியல் - 8
வசந்தம் ஏழை; வழவழ குடையாள்
கசந்த வாழ்வும் களிப்பில் மாறிட
வசதி மிக்க வடிவே லென்பான்
இசைந்தே அவளை இணையாய் ஏற்றான்
குழந்தை பெற்றுக் கொஞ்சி மகிழ்ந்தனர்
வளமிகு வாழ்வில் வாட்டமும் சூழ்ந்தது
வடிவேல் குடித்தே வாழ்வைத் தொலைத்தான்
குடித்துச் சொத்தைக் கொத்தாய் அழித்து
ஈரல் வீங்கி இளைத்துச் செத்தான்
ஊரெலாம் தூற்ற ஓய்ந்தது வாழ்வு;
வாழ்வழி அறியா வசந்தம் அழுதாள்;
சூழ்நிலை புரிய துணிந்தே எழுந்தாள்
தையல் கற்றாள்; தயக்க மின்றிப்
பையக் கட்டிடப் பக்கம் சென்று
பைந்தூள் சாக்குகள் பார்த்து வாங்கினாள்
பைகள் செய்தே பையன் படிப்பைப்
பலரும் போற்றப் பாங்குடன் முடித்தாள்
உலகம் போற்றும் உயர்ந்த நிறுவனம்
அவளின் மகனை அள்ளிச் சென்றது
தவத்தால் பெற்ற தங்க மகனும்
அன்னையைத் தெய்வமாய் அடிபணிந் தேற்றி
முன்னைத் துன்பம் முற்றிலும் நீங்கினான்
கசந்த வாழ்வும் களிப்பாய் மாறி
வசந்த விடியல் வந்து சேர்ந்ததே!
(நிலை மண்டில ஆசிரியப்பா)
- த. கருணைச்சாமி, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.