கொரானாவை வெல்வோம்! - 12

சீனத்து பொங்கல் சீரே...
கொரோனாவாமே...
உன் பெயர்...
உன் மேல் ஏன்
இத்தனை வெறுப்பு...?
எட்டிப் போய்க் கொண்டிருந்த
அத்தனை உறவுகளின்
உன்னத உணர்வுகளை
இணைக்கத்தானே செய்தாய்...
நாங்கள்
மறந்து கொண்டிருந்த
பழமையின் சுவையை
பறிமாறத்தானே செய்தாய்...
மஞ்சளும் வேம்பும்
எங்கள்...
மண்ணின் சொத்தல்லவா...
அதனை மீட்டுக்கொடுத்தது
நீ தானே இன்று...
அலுவலகமும் ஆலயமும்...
ஆனந்தம் என்றிருந்தவர்களை...
அவர் தம் குடும்பத்தோடு...
சற்று இளைப்பாறச்செய்து...
இன்புற...
நல்ல தீர்ப்பு தந்த
நவீன நாட்டாமைதானே நீ...
பல்லாங்குழியும்...
பரமபதமும்...
கண்டு பரவசித்து...
கணிப்பொறியில் மூளைவரை மட்டும்
மகிழ்ந்த எம் குழந்தைகள்...
இன்று மனம் நிறைந்த
மகிழ்ச்சியில்...
செய்ததும் நீதானே...
இரசாயன கலப்பில்லாத
காற்று...
விபத்து மரணமில்லா
விடியல்...
விபரீத ஆசை தொலைத்த
இளைஞர் கூட்டம்...
குறைக்கப்பட்ட
வீன் செலவுகள்...
பகிர்ந்து மகிழ்ந்து
வீட்டு வேலைகள்...
இன்னும்... இன்னும்...
இவையும் உன்னால்தானே...
இவ்வளவு இருந்தும்...
உன் மேல்... ஏன்
இவ்வளவு வெறுப்பு...?
இத்தனையும் செய்துவிட்டு...
இதற்குக் கூலியாய்
நீ கேட்டது...
எம் மக்களின்
உயிரையாமே...
சீனத்துச் சீர்வரிசையே...
கடல் கடந்து வந்தாயோ...
காற்று வழி நுழைந்தாயோ...
வந்தாரை வாழவைக்கும்
வளமான பூமிதான்
எங்கள் பாரதம்...
ஆனால்...
சொல்கிறேன் கேள்...
மண்ணின் மைந்தர்க்கு
ஒன்றென்றால்...
ஒன்றுபடும் நெஞ்சங்கள்...
ஒழிக்க வந்தவனை
ஒடுக்கிவிடும் கூட்டம் இது...
ஒருவகையில் நல்லதும்
நீ செய்ததால்...
அன்போடு சொல்கிறேன்...
உரிமையாய் விளையாடு...
உயிர்க்கொலை செய்யாதே...
காற்று வழி
வந்த நீ...
காற்றில் கரைந்து
கைலாயநாதன் திருவடி சென்றுவிடு...
நன்றியோடு
நாங்களும் இருப்போம்...!!
- முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.