கொரானாவை வெல்வோம்! - 14

யார் நினைத்தார்...
இப்படியொரு காலம்
வருமென்று...
பொழுதிரவாய் உள்ளடங்க
வேண்டுமென்று
போர் முரசினை
அறைந்தது யார்...?
வான்பறவை இறக்கைக்
கட்டிப் பறக்கிறது...
நீலக்கடல் அலை மீதில்
தோணிகளும் கப்பல்களும்
மிதக்கின்றன...
எதிரிகளால் எழுந்து நின்ற
துப்பாக்கிகளும் வாய்மூடிப்
படுத்துக் கிடக்கின்றன...
ஒன்பது வழிச் சாலைகளும்
பாலங்களும், பயணங்களும்
ஓய்ந்து கிடக்கின்றன...
பாடசாலை சென்ற
பிள்ளைகள்
முடங்கிக் கிடக்கின்றனர்...
எல்லாம் ஒரு நொடிக்குள்
அடங்கி ஒடுங்கி பாயின்றி
படுக்குமென்று...
பதினான்கு நாள்
தனிமைப்படுத்தும்
கொரொனா பிறக்குமென்று...
நம்மையெல்லாம்
ஓட்டமின்றி ஒதுக்கி வைத்து
கேள்வி கேட்டு
முடக்குமென்று...
ஐவகை நிலம் கண்டோம்
காணாத ஒன்றிற்கு
மதி கலங்கி நிற்கின்றோம்...
மண்ணையும் விண்ணையும்
அளந்தோம்...
வடிவில்லாத ஒன்றிற்கு
வாய் பிளந்து அழுகின்றோம்...
அறிவு கொண்டு
எழுந்து நின்றோம்...
ஆடம்பரமில்லாமல்
எதிர் கொண்டோம்...
கனவு போல்
கண்டுணர முடியாமல்
சிறைப்பட்டுத் தவிக்கின்றோம்...
புராணக் காலக் கதைகளில்
வருவதைப் போல்
மாயமாய் நின்றதால்
மயக்கத்தில் மருளுகின்றோம்...
இருண்ட உலகம் இதுவென்று
மனங்களெல்லாம்
பயத்தினால்
திசைமறந்து அலைகின்றோம்...
உறவினை மறந்து
விருந்தினை விட்டுத்
தனித்திருக்கின்றோம்...
தூய்மையோடு
விலகி இருப்போம்...
அரணிட்டுக்
காவல் செய்வோம்...
சமூகத்தினைக் காத்திடுவோம்...
ஓய்வறியா உலகினோர்க்கு
ஓய்வளித்தாய்...
நன்றியென்று
நல் மருந்திட்டு
உன்னை அனுப்பி வைப்போம்...
- முனைவர் ஆர். நிர்மலாதேவி, ஈரோடு.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.