கொரானாவை வெல்வோம்! - 16
மடைத் திறந்தார்ப் போல் பாய்தோடும் நீரோட்டம்...
முந்தி அடித்துச் செல்லும் முயற்சியின் வேகம்...
ஓய்வில்லாத உன் பயணத்தால்
உறங்க விடாமல் துரத்துகின்றாய்
இந்த உலகை...
உன் உக்கிரத்தால்
ஆடிக்கொண்டுள்ளது இந்த அகிலம்...
உயரம் சென்ற உலகை
எல்லாம்
சிறு புள்ளிகளாகச் செதுக்கி விட்டாய்...
ஆணவம் கொண்டவனை
அடக்கிவிட்ட
அசுரன்...
ஆட்கள் இல்லாத இடத்தில் கூட
உன் நாடகத்தை அரங்கேற்றம்
செய்கிறாய்
அனுதினமும்...
உன் கோரத் தாண்டவத்தால்
நாங்கள் கோழைகளாக
முடங்கி விட்டோமா...?
இல்லை
இளைத்தவன் வலுத்தவன் முன்
எதிர்ப்பின்றி
வீழ்ந்தோமா...?
பிஞ்சு விரலில் கூட
நஞ்சினைத் தொற்ற
வைக்கும் கொரோனா
என்னும் பெயர்
கொண்ட அரக்கனே...
நீ செய்யும்
உனது குற்றங்களுக்கு...
யார் தண்டனைக் கொடுப்பது...?
உன் முகவரி
கண்டுபிடித்து
உன்னை அள்ளிக் கொண்டு போய்
மண்ணில் புதைத்து விடவா...?
இல்லை
உன்னை நீதி என்னும் கூண்டில்
ஏற்றி சிரச் சேதம் செய்து விடவா...?
இல்லை
அல்லல்படும் மக்களுக்காக
இம்மண்ணுலகின் மாந்தரெல்லாம்
உன்னைச் சொல்லினால்
சுட்டெரிக்கும்படிச் சொல்லி விடவா...?
இந்த பூமி உனக்கானதா?!!
இனத்தாலும் மதத்தாலும்
வேறுபட்டாலும்
மொழியால் ஒன்றுபட்ட
தமிழெல்லாம் ஆற்றலில் ஆயிரம்
கதிரவன்...
உன் தூற்றலை ஊதிடுவோம்
காற்றாக...
சமூக நீதியும்
சமய நீதியும்
முடக்கி விட்டாயோ...?
என் பொன்னுலகின்
மண்ணைத் தொட்ட உயிரை எல்லாம்
உருவம் தெரியாமல்
உருக்குலைவுச் செய்த
செய்தியினை வரலாறு கூறும்...
கொரானா என்னும்
அரக்கனே
வரலாற்றைத் தெரிந்து
தலைதெறிக்க
உலகை விட்டு ஓடிவிடு!
- கவிஞர் முனைவர் பா. ஜான்சிராணி, சென்னை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.