கொரானாவை வெல்வோம்! - 3
காதுகொடுத்துக் கேள் மனிதா! காகம் கரைவதை
கண்மூடி அமர்ந்திருக்குமென் காதருகே காற்றின் குரல்
கடிகாரம் முன் கண்விழித்து கைபேசியுடன் பல்துலக்கிக்
காலில் சக்கரம் கட்டிய காலைப் பொழுதுகளில்
என்றாவது நீ எங்கள் குரலைக் கவனித்ததுண்டா?
எங்கு பார்க்கிறாய்? நான் வேப்பமரத்திலிருந்து பேசுகிறேன்
இது கற்பனையா? இல்லை நிஜமா? காகம் கூடப் பேசுமோ?
விலங்குகளும் எம் பறவைகளும் கூட்டமாய்
வீடுகளில் அடைந்து கிடக்கும் மனிதர்களைக் காண
வீதி உலா வருவதைக் கண்டு வியப்புற்றாயோ?
கண்ணுக்குப் புலப்படாது காற்றோடு கலந்து
கால்களில்லாமலேயேக் கண்டங்கள்தோறும் பயணித்து
மண்ணுலகை ஆட்டுவிக்கும் மரணத்தொற்று கொரோனாவின்
விதியை முடிக்கவே யாம் வீதிகளில் திட்டமிடுகின்றோம்
வானுலகைக் கையகப்படுத்தி வாழ நினைத்த தேசமெல்லாம்
வீழும் பிணங்களைப் புதைக்க விழிபிதுங்கி நிற்கும் நிலையில்
நாட்டுமக்கள் நலம்பெற அல்லும் பகலும் திட்டமிடும்
நம் அரசுக்கு உதவவே நாங்கள் கிளம்பிச் செல்கின்றோம்
விரைவில் விரட்டுவோம்! கொரோனாவின் விதியை முடிப்போம்!
- நாங்குநேரி வாசஸ்ரீ, சென்னை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.