மார்கழிக் கோலங்கள் - 1

மாதத்தில்
சிறந்த மாதம்
மார்கழி ஒன்றுதானே
பகலவன் விழிக்கும் முன்னே
என் ஆத்தா மாக்கோலம்
போட்டிடுவா...!
நோய்களெல்லாம் நீங்கிட
வீடுவீடாய்ப் பஜனைகள்
செய்திடுவா...!
எறும்புகள் வரிவரியாய்
எங்கள் வீட்டு வாசலிலே
மாக்கோலம் உண்டுவிட்டு
தன் வீடு சென்றுவிடும்
ஒத்தப்புள்ளி வச்சுப்புட்டா
ஊரையெல்லாம் கோலத்தில்
பூட்டிடுவா...!
அண்டை வீட்டுச் சண்டைக்காரி கூட
எட்டிப் பார்த்திடுவா...
மார்கழிக் கோலம் போட்டா
தூயகாற்று வந்திடுமாம் - மனத்
தூசு எல்லாம் பறந்திடுமாம்
இவையெல்லாம் இப்போ உண்மையாகிடுமா?
ஒட்டுப்படம் போட்ட கோலங்களும்
சுண்ணாம்புக் கோலங்களாலும்
எறும்புக் கூட்டத்திற்கு ஏமாற்றம்
எத்தனையே வாசல்கள் அலங்கரித்திட
ஆட்களின்றி அனாதையாய்க் கிடக்கின்றன.
பறிக்க யாருமின்றிப் பரங்கிப் பூக்கள்
பரிதாபமாய்ப் பார்க்கின்றன...
தூயகாற்றுக் காலம் என்பதெல்லாம்
தொலைந்து போச்சு!
மார்கழிக் கோலம் எல்லாம்
சிதைந்து போச்சு!
சந்தைக்கு வந்திடுச்சு தூயகாற்று
உருளைகள் - எறும்புக் கூட்டமாய்
வாங்கிச் செல்லும் மனிதர் கூட்டம்...!
மார்கழி மாதம் போடும்
மாக்கோலங்கள் எங்கே...?
விடியலில் மகளிர் எங்கே...?
மீண்டும் பிறந்திடுமா...
மார்கழிக் கோலங்கள்...!
என் ஆத்தாவின் விரல்களில்...!!
- த. சித்ரா, ஈச்சம்பூண்டி, கடலூர் மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.