மார்கழிக் கோலங்கள் - 11
நடுங்கிட வைத்திடும் மார்கழி மாதப்பனியினிலே;
நற்சூரியன் உதித்திடும் முன்னே;
மகிழ்வுடனே படுக்கையை விட்டெழுந்து;
குளிர்ந்த நீரிலே நீராடிடுவேன்!!
மாட்டுத் தொழுவத்திலே எடுத்து வைத்த
சாணத்தைக் கரைத்தே;
வாசலின் முற்றத்தில் தெளித்திடுவேன் நான்!!!
அழகிய புள்ளிகளை அழகாய் இட்டு;
நேர்த்தியாய் வளைவுக் கோலங்கள்;
நித்தம் ஒன்றாய்ப் போட்டு மகிழ்ந்திடுவேன்;
மார்கழி மாதத்துக் குளிர் தனிலே!!!
நேர்த்தியாய் நான் இட்டு மகிழ்ந்த கோலத்தினை;
இன்னும் அழகாக்கவே;
வண்ணப்பொடிகள் தூவியே;
விருப்பத்துடனே அலங்கரிப்பேன்!!
முதல் நாளிலேச் சேகரித்த
மாட்டுச் சாணமதை;
கோலத்தின் நடுவினிலே அமர வைத்திடுவேன்!!
என் தோட்டமதில் பூத்த பூசனிப்பூவை;
சாணமதின் நடுவினிலே;
அழகாய் நானும் அமர்த்திடுவேன்!!
மார்கழி மாதத்தின் முப்பது நாளும்;
மகிழ்வுடனே நானும் கோலமிட்டு;
நம் தமிழர்தம் பண்பாட்டை;
தவறாமல் கடைப்பிடிப்பேன் நாளும்!!!
- கோமதி முத்துக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.