மார்கழிக் கோலங்கள் - 12
ஆதவன் கரம் வையந் தீண்டுமுன்
மெல்லிடை வந்தியம்ப முவந்தது
விடியலுக்கும் விழிப்பிற்குமிடையே நடக்கும் இவை
கோமாக்களின் சத்தமில்லாப் போர்
சேவல் கூவ செவி கேட்டெழுந்த செங்காந்தள்
மெல்விரலோள் சேர்ந்தெழுதும் கோலமிது
வெண்ணீல மூலையில் மஞ்சூழ்ந்திருக்க விண்வெள்ளியாய்
அகல் விளக்கொளிரும் ஆயர்குடியெங்கும்
வண்ணச்சிதை நடுவே மெல்லப்பிடித்த கோசாணம்
கூடவேக் குடைபூத்த பரங்கிப்பூவாம்
கைவீசும் வளையோசை அஞ்சுகமவள் நீல
தாவணியில் பூத்த பூங்கோதை
குள்ளக்குளிராடி தேர்வீதியில் பவனித்து தரணிதாகந்தணிக்கு
மங்கையவள் கூந்தல் ஈரம்
சில்வண்டுகள் ரீங்காரமிசைக்க செவிகுதம்பை
சேர்ந்தே ஆடும் நடன நாட்டியம்
கோமகன் குலம் பாட சங்கமித்த சுந்தரிகள்
சொல்லால் நோன்பாடி அருள் பெறுவர்
நாங்கள் பள்ளிசெல்லும் முன்னே மங்கையரின்
மாவிலைக் கோலம்கண்டு மகிழ்வோம்!
நீங்காத நினைவுகளாய் எண்ணயியலாக் கோலமதை
எண்ணியெண்ணிப் பார்க்கையிலே
பணம்கோடி கொடுத்தாலும் இதெல்லாம் கிடைக்குமா?
மாகோதை புனைந்த மார்கழிக் கோலமதைக் கண்டு மகிழ்வோம்!
- ச. காளிராஜ் (எ) சிவசக்திவேல், மதுரை..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.