மார்கழிக் கோலங்கள் - 14
* ப்ரிய சகி
மார்கழியின் மன்மதக் கோலங்கள்
உன் புன்னகையின் மிச்சங்கள்
* காலத்தால் அழியாத கோலங்கள்
நம் இளமைக் காலங்கள்
* வண்ண வண்ணக் கோலங்களாய்
என் மனதில் உன் மௌனமொழிகள்
* உன் கொலுசொலிகள் - என் இதயத்தில்
விதைத்ததோ இன்னிசைக் கோலங்கள்
* உன் வாயிற்கோலங்களுக்குப் புள்ளிகளாய் நாமிருவர்
சுற்றிவரும் கோடுகளாய் சுற்றத்தார்
* நடுநிசியில் குடையைத் தேடுகிறேன்
பனிமழையில் நனையாமல் உன் கோலங்களுக்குக் குடைப்பிடிக்க
* உன்னை நான் பார்த்த போது - நாணத்தால்
உன் கால்விரல்கள் வரைந்த காதல் கோலங்கள்
* திருப்பாவை, திருவெம்பாவை எங்கும் ஒலிக்க
என் மனமோ தெருப்பாவை உன்னைத் தேடியது,
* கண்ணீர் மழை பெய்தும்
காணாமல் போகாத அழியாத கோலங்கள் உன்னகத்தே
* மார்கழியின் மாலையிலே அந்தி மேகங்களுக்கிடையில்
கதிரவனின் வண்ணக் கோலங்கள்
* கோலமிட்ட உன் கைகளுக்கு
கோடி கோடி முத்தங்கள்
* மாக்கோலம் போடும் மயிலே
நான் மணக்கோலம் காண்பது எப்போது?
- பா. சிதம்பரநாதன், கீழக்கருவேலன்குளம், களக்காடு.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.