மார்கழிக் கோலங்கள் - 16
கார்த்திகைத் தாயின் சேயாய்
மார்கழி பிறந்தாள்
தைச்சேயின் தாயாய் மார்கழி வந்தாள்
கார்காலத்திற்குப் பின்னேயும்
கோடைக்கு முன்னேயும்
வந்த பனிக்காலமே மார்கழி
வைகறைப் புல்நுனியில்
மார்கழி மொட்டு பூத்தது
தரையெங்கும் பனித்திவலைகள்
பட்டுக்கம்பளம் விரித்தன.
புள்ளினக் குஞ்சுகள்
கூட்டினுள் நடுங்கின
தாய்ப்பறவை இறக்கையால்
அணைத்துக் கதகதப்பினைத் தந்தது
பக்தர்கள் கோயிலில் பரவசம் அடைந்து
பக்திப்பாடல் முழங்கினர்
வந்த ஓசை, விண்ணில் பரவிய
முகிலைக் கலைத்தது.
முற்றிய கதிரைக் கண்ட
உழவர் மகிழ்ந்து
அறுவடை செய்ய விளைநிலம் போந்தனர்
ஆண்டாள் நாச்சியார், துயின்ற பெண்டிரை
அண்ணலடிப் போற்ற எழுமினோ
என்றதும் மார்கழியிலே!
மார்கழி போற்றுதும்! மார்கழி போற்றுதும்!!
- கி. சுப்புராம், தேனி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.