மார்கழிக் கோலங்கள் - 17

கோல மொழியாள்!
பட்டுப்பூச்சியின் வண்ணம் சுமந்தவள்
வளைவுகளில் வாழ்க்கை சொன்னவள்
பூக்களின் நடுவே பூத்து இருப்பவள்
இன்று தன்னைத் தேடுகின்றாள்!
வண்ணமேனியாள்!
ஒவ்வொரு வாசலிலும் வந்து நிற்கின்றாள்
தன்னைத் தொலைத்ததன் காரணம் தேடுகின்றாள்
மாறிவிட்ட மானுடத்தில் சின்ன மாற்றமோடு
கன்னிமனத்தில் கனவுகள் பிறக்குமா? என்றே தேடுகின்றாள்!
கோல மொழியாள்!
வீதி வழியே மார்கழி மாதங்களில்
மங்கை தன் மணப்பந்தல் காண வேண்டி
விரதமிருக்க கண்ணனைப் போல் கணவன் வேண்டுமென
கண்கலங்கி வேண்டிக் காத்திருந்த கோலமொழியாள் எங்கே?
வண்ணமேனியாள்!
பருவத்தின் பாசங்களைப் பகிர்ந்து கொள்ள
அதிகாலை வேளையிலே அன்பு நெஞ்சம் கொண்டு
தோழியோடு கைகோர்த்து காதலின் ஏக்க
உள்ளத்தைப் பகிர்ந்து கொண்ட வண்ணமேனியாள் எங்கே?
கோல மொழியாள்!
உணர்வுகளைக் கொட்டித்தீர்க்க வாய்மொழி
பேசாமல் கைமொழி பேசித் தன்
அன்பின் உணர்வை அள்ளிக் காட்டிய
அற்புத மொழி பேசும் கோலமொழியாள் எங்கே?
வண்ணமேனியாள்!
கால வேகத்தில் கலாச்சாரங்கள் கரைந்து கொண்டிருக்க
பருவ வயதில் கொண்ட பண்புகள் தனித்து போய் வாட!
வசந்தங்கள் நம் வாழ்வில் உண்டென்று
பறைசாற்றும் வண்ணமேனியாள் எங்கே?
கோலமொழியாள்!
மார்கழி மாதத்தில் பனிமழை பெய்யுமென்று
காத்திருந்த கோலமொழியாள்!
தன்னைக் கோலமிட யார் வருவாரென்று
கண்ணீர்விட்டுக் காத்திருக்கின்றாள்...
- முனைவர் த. தாழைச்செல்வி, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.