மார்கழிக் கோலங்கள் - 19
அடித்துப் பெய்த மழை அடங்கி ஒடுங்கி ஆசுவாசமாய் வழி விட்டது
வந்தது மார்கழி... வரவேற்றது பனிதுளிகள்.
திருப்பாவையும் திரு வெம்பாவையும் எதிர் கொண்டது...
சூடிக் கொடுத்த நாச்சியாரின் பவனிக்காலம்...
முப்பது நாளும் முப்பது பாசுரங்கள்
வரவேற்க வாசலெங்கும் மாக்கோலங்கள்...
எறும்புகளுக்கும் ஈக்களுக்கும்
வீட்டு பெண்களுக்கோர் ஆசுவாசப் பயிற்சி ...
குனிந்து நிமிர்ந்து கோலமிடும் காட்சி
இது அந்தக்காலம்
நடைப்பயிற்சி இந்த காலம்...
இடும் உணவே மாக்கோலம்... மன எழிலின் பூக்கோலம்...
மணம் வேண்டி கன்னியர் இடும்கவின் கோலம்...
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் யாத்திரைக்கு
முகமன் கூறி எழுதும் முன்னுரை தானோ இக்கோலம்...
விடிந்தது நற்பொழுதே அறியீரோ என்றுரைப்பதற்குத்தானே
வாசலில் இடும் கோலம் தானே சாட்சி
எழுதாத விளம்பரம் இதுதானோ...
அதுவும் மார்கழி கோலங்கள்...
மண மாலைக்காய் கன்னிகள் இடும் மாக்கோலங்கள்
மாதவம் கொண்டதன் பலனல்லவா மார்கழி கோலம்...
முப்பது நாளும் நன்னீரில் நீராடி நாரணர் தாள் நினைத்து
ஆண்டாளின் அம்சமாயிருந்து இடும் கோலம்
தையில் தானே வழி பிறந்து தாயாய் தாலாட்டுப் பாட வைக்குமே...
- கவிஞர் பரணி ரமணி, மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.