மார்கழிக் கோலங்கள் - 21
தைத்திருநாள் வருகைக்கு ! ஆதவனை வரவேற்க!
தையல் அவள்! மாதவனின் மாதத்தில்
வாசலில் விடியலில் வடிக்கும்,‘அழைப்பிதழ்’
மார்கழிக் கோலங்கள்!
நெடிய இரவுகள்! நெருடும் பனித்துளிகள் !
பிரபஞ்சத்தின் பிரம்மமுகூர்த்தம் !
பிரணாவாயுவின் சகவாசம் !
பூமகள்கள் ! நலனுக்குநலன் சேர்க்க...
விடிய கண்விழித்து விடியலை சுவாசிக்க!
குத்தவைத்து குணிந்து பணிந்து
பனியில் பக்தியில் பஜனையில் நனைந்து
புள்ளிவைத்து நெளித்து வளைத்து
சித்திக்க வந்ததே ! மார்கழிக் கோலங்கள்!
கார்குழலாள் கைவண்ணத்தில்
கார்மேகவானவில் வண்ணத்தில் நித்தம் உதிக்கும்
புத்தம்புது ஒவியங்கள் மார்கழிக் கோலங்கள்!
வாசல் வரைவந்துபோக - மாக்கோலம் !
எறும்புக்கும் சில உயிருக்கும் உணவு!
வாசலோடு நின்றுபோக - வெண்மணல் கோலம்
விஷஜந்துக்கு லெட்சுமண ரேகை!
‘சுயம்வரம்’ இல்லா தேசத்தில், இது ஒருவகை
- மணமகள் விளம்பரம்! மணமகன் வரக்கூடும்!
‘தைமகள்’வருகை சொல்ல
வீடுதோரும் விளம்பரப்பலகை !
மார்கழிக் கோலங்கள்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.