மார்கழிக் கோலங்கள் - 22
முன்வாசலில் நிறைந்திருந்த
மார்கழி பனியின் திரவத்துளிகளை
கம்பிவாளி ஒசையோடு
தண்ணீர் தெளித்துக் கரைக்கிறாள் ...
தேர்ந்த ஒவியனின் விரல்களைப் போன்று
இயங்கிய அவளது கைகள்
இறுதியில் வரைந்து முடித்தது
ஊடுபுள்ளி ஊடுவரிசை கோலத்தை ...
பிள்ளையார் பிடிப்பதைப் போல
மாடக்குழியிலிருந்த சாணத்தை உருட்டி
கோலத்தின் நடுவில் வைக்கிறாள்
பூப்பதற்கென்ற பிறந்ததைப் போன்று
பூத்திருந்த பூசணிப்பூவை
சாணத்தின் தலையில் சொருகுகிறாள்
எஞ்சியிருந்த வாளித் தண்ணீரில்
கைகளைக் கழுவி விட்டு
ஒரு கவிதையை வாசிப்பது போல
திண்ணையிலமர்ந்து ரசிக்கத் தொடங்குகிறாள்
பூவின் உட்குழியிலிருந்து
மேல் நகர்கிற கட்டெறும்பை ...
- வே. முத்துக்குமார், திருநெல்வேலி
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.