மார்கழிக் கோலங்கள் - 25
விடியும் முன்னே விழித்தவளே
விரலில் தூரிகை தரித்தவளே
விழியால் இருளை எரித்தவளே
விரைவாய் இதயம் பறித்தவளே!
மார்கழிக் குளிரின் இளஞ்சூடே
மன்மத நாட்டின் தனித்தீவே
மனதை வருடும் மயிலிறகே
மௌனம் பேசும் இயலழகே!
வீதியில் மார்கழிக் கோலமிடும் - உன்
விரல்கள் எல்லாம் ஜாலமிடும் - அதை
ஆயிரம் கண்கள் காணவரும், அதில்
அழகே உனக்கு ஞானம் வரும்
சிக்குக் கோலம் ஒன்றே போதும் - எனை
சிக்க வைக்கும் தூண்டில் - உன்
வெட்கக் கோலம் கண்டு - அதில்
வாழ்வேன் ஆயிரம் ஆண்டு
நீ கோலமிட்ட பிறகுதான்
நிஜமாய் அழகானது உந்தன் வீதி - அதனால்
பிரம்மனே பிரமித்தான் என்பதுதான்
பரபரப்பான தேவலோகத்துச் செய்தி
மார்கழிக் கோலம் போடும்,
மார்கழிப் பூவே உந்தன் -
மை விழிப் பார்வை போதும் - என்
மனதெல்லாம் மார்கழிக் கோலம்!
- வெ. இராமபிரசாத், கரூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.