மார்கழிக் கோலங்கள் - 28
கார்த்திகையின் வாரிசோ? மார்கழியே நீ
தைமகளின் முன்னோடியோ?
மார்கழி மாதம் பனிவிழும் நேரம்!
வாசல்கள்தோறும் கோலமிடும் மாதம்!
சாணிப்பிள்ளையார் மீதெல்லாம்
பூசணிப்பூக்கள் பூத்திடும் மாயம்!
மிதிக்க மனமில்லாமல் கோலம் பார்த்து
மிருகங்கள்கூட சற்று விலகியே போகும்!
ஒற்றுமையும் சுறுசுறுப்பும் மட்டுமல்ல_மனிதனைவிட
மோப்பசக்தியும் எறும்புகளுக்கு அதிகம்!
பனிநேரம் உணவின்றி பசியாறும் வழியின்றி
சிற்றெறும்பு முதல் புழுபூச்சிகள்வரை
சுற்றிவரும்போது மாக்கோலமே எறும்புக்கு உணவாகும்!
பூக்கோலம் மாக்கோலம் வீடெல்லாம்
மணக்கோலம் ஊர்கோலம் காணும்!
கோலங்களில் உள்ள பூக்களைப் பார்த்து
மரஞ்செடி கொடிகளிலுள்ள பூக்களும் நாணும்!
குளித்து முடித்து குனிந்து நிமிர்ந்து - பெண்கள்
கோலமிடும் வேளையெல்லாம்
யோகாசனம் ஆகும்!
மழை வந்தால் மனைவிக்கு குடை பிடித்து
கணவர்கள் சேவைகள் செய்திடும் நேரம்!
மார்கழி மாதம் பனிவிழும் நேரம்!
மனைகள்தோறும் மங்கலம் பெருகும்!
- சுத்தமல்லி உமா ஹரிஹரன், திருநெல்வேலி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.