மார்கழிக் கோலங்கள் - 29

மாதமோ ஒன்பதாம் மார்கழி என்பதாம்
நிறைமாத நிறைவாம் குளிருக்கில்லை குறைவாம்
திருப்பாவை ஒலித்திடும் திருவெம்பாவை அளித்திடும்
மார்கழியின் பெருமைகளோ மனமெல்லாம் களித்திடும்
தேவர்களின் மாதமாம் கிருட்டிணனின் வேதமாம்
பீடையுள்ள மாதமன்று பீடுடுடைய மாதமாம்
அதிகாலைத் துயிலெழுப்பி சுறுசுறுப்பைக் கூட்டுமாம்
மங்கையரின் மகத்துவத்தைக் கோலங்கள் காட்டுமாம்
எண்ணமெல்லாம் பாவையரின் கைவண்ணமாக மாறுமாம்
தெருவெல்லாம் கோலமிகு வண்ணங்கள் கூடுமாம்
சாணத்தில் பூசணிப்பூ அழகழாய்ப் பார்க்குமாம்
விரல்மூலம் வித்தைகளோ புத்திகூர்மையை ஏற்குமாம்
எண்ணத்தின் ஒருங்கமைப்பை எழில்கோலங்கள் காட்டிவிடும்
ஓசோன்படலமது உயிர்ப்புள்ள உயிர்க்காற்றை ஊட்டிவிடும்
அரிசிமா(வு)க் கோலங்கள் உயர்கருணை நாட்டிவிடும்
குனிந்துநிமிர்ந்து போடுவதால் உடற்பயிற்சியைக் கூட்டிவிடும்
தெருக்கள்தோறும் வானவில்லாய் தெய்வமணம் கமழ்ந்திடுமே
கோவில்கள் பள்ளியெழுச்சிப் பண்களாலே சூழ்ந்திடுமே
பெண்களின் தெய்வபக்தி தீபங்களால் ஒளிர்ந்திடுமே
குடும்பத்தின் குதூகலங்கள் என்றென்றும் மிளிர்ந்திடுமே
நவீன பெண்களெல்லாம் செவிகொஞ்சம் மடுப்பீரா
பண்பாட்டுப் பாரம்பரியம் பழங்கதைகள் என்பீரா
கோலங்களின் வரைகலையை ஆர்வமாகக் கற்பீரா
கணினிபிடிக்கும் கையாலே கோலமாவைப் பிடிப்பீரா?
- கவிஞர் மு. வா. பாலாசி, ஓசூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.