மார்கழிக் கோலங்கள் - 3
சில்லென்ற பனிபொழியும்! சிறுமலர்கள் வெடவெடக்கும் !
சிற்றிடையாள் நடைபோல புற்களெல்லாம் படபடக்கும்
மென்குயிலாள் தேன் உதட்டில் மந்திரங்கள் தவழ்ந்திருக்கும் !
ஆலயமணி ஓசையொலி அதிகாலை தவழ்ந்து வரும்
மார்கழியின் விடியலிலே! வஞ்சியரும் நீராடி!
வீடெல்லாம் தீபஒளி ஏற்றி நிதம் புகைகாட்டி
கழியின் மன்னவனின் மந்திரங்கள் நாவிலேந்தி!
பசுஞ்சாணம் வாசலிலே பக்குவமாய் தெளித்து!
பச்சரிசி மாக்கோலம் பக்குவமாய் ஓவியமாய் வரைந்திடுவாள்!
குலம் காக்கும் குணமகளாம் எங்கள் தமிழச்சி!
மல்லிகைப்பூ கோலங்கள், முல்லைப்பூ கோலங்கள்!
முத்தமிழும் முதல் வணக்கம் சொல்லும் முதல் கோலங்கள்
ஆண்டாளின் திருப்பாவை ஆலயத்தில் மனமினிக்கும்!
வேண்டாமை நீக்கி நிதம் வேண்டியதைதான் கொடுக்கும்
மார்கழிக் கோலங்கள் மறத்தமிழன் மரபென்று!
கற்றவரும் மற்றவரும் உற்றவரும் உயிரென்று!
மார்கழியில் கோலமிட்டு மறையவனைத் துதித்திடுவோம்!
மண்ணாளும் விண்ணாளும் பெருவரத்தை நாம் பெறுவோம்!
- அ. பாண்டுரங்கன், திருநகர், மதுரை-625006

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.