மார்கழிக் கோலங்கள் - 7
மார்கழி மாதம் மங்கையர் குளித்துச்
சீர்மிகு கோலம் சிறப்பாய் இடுவர்
கோலத்தின் நடுவே கூம்பாய்ச் சாணம்
சீலமாய்ப் பிடித்தே செவ்விய முறையில்
பூசனிப் பூவைப் பொங்கும் அழகுடன்
வாசலில் இட்ட வண்ண வரைவின்
நடுவில் நடுவர்; நடப்பவர் எல்லாம்
எடுப்புடன் இருக்கும் எழிற்கோ லத்தை
பாராட் டிடுவர்; பரவசம் எய்துவர்
சீராட் டுவதுடன் செழிப்பாய்க் கோலம்
இடும் நல் நங்கையை எழிற்சீர்க் காளையர்
சுடும்தம் விழியால் சுழற்றிப் பார்ப்பார்
மாக்கோ லத்தின் மாவரி சிதன்னை
ஊக்கமாய் எறும்புகள் ஒன்றில் லாமல்
கார்கா லத்துக் கடும்பசிக் குதவ
சேர்த்துக் குழிக்குள் சேமித் திடுமே
பெருமாள் பக்தர் பசனை பாடித்
தெருவெங் கும்போய் தெய்வம் போற்றிக்
கோவிலை அடைவர்; கொள்வர் சுண்டல்
மாவிலைத் தோரணம்; மணக்கும் பூக்கள்;
கங்குவில் எழுந்திடும் பக்தர் கூட்டம்
எங்கு நோக்கினும் எழிற்கோ லமாமே!
- த. கருணைச்சாமி, தேனி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.