மார்கழிக் கோலங்கள் - 9

ஆலயத்தில் பாசுரங்கள் அதிகாலை ஓதிவரும் நிறைவு!
ஆதரவில் இயற்கை அறிய எடுத்துக் கொள்ளும் பயிற்சி!
தெருக்களில் கோலமிட்டுக் கொண்டாடல் மகளிருக்கு மகிழ்ச்சி!
காலை எழல் மனவளம் மெய்வளம் பெருக்கிடும் உத்தி!
கூதிருக்குப் பின் செடிகொடிகள் கண்டிடும் புதுத்தளிர் உறவு!
பூகமலம் பனிச்சூட்டில் கருகிடல் இயல்பான நிகழ்வு!
தூபனிக் காற்றலைக்கும் ஞாழல்கொடி வெளிரும் புனைவு!
நூவிழை கரும்பினக் கொல்லைகள் செழித்திடும் உயர்வு!
ஆண்டுதோறும் மீளவரும் அதிசயம் சுழல்கோள்களின் படைப்பு!
தேகபலம் வளர்த்திடும் வெம்பாக் காலத்தின் சிறப்பு!
வானவர் ஆண்டுக்கணக்கில் காலை எனும் நிலைப்பு!
மானிடர் புலால்நீக்கிப் புனிதம்வளர் முயற்சியின் அழைப்பு!
காவினில் புல்நுனியில் பனித்துளி கவினுறுகண் காட்சி!
ஓங்குநெல் கதிர்|நிலந் தொடவரும் கழனியின் மாட்சி!
வாவியில் பெடைஉடன் அன்னமும் நீந்திடும் மகிழ்ச்சி!
ஆனந்தம் அன்றிலின் ஒளியும் நிறைந்திடும் களிப்பு!
மானினங்கள் மகிழ்வுடன் இங்குமங்கும் பயில்நடை அருமை!
தோன்றிடும் மஞ்செலாம் மிகஅருகில் வந்துறும் புதுமை!
வானத்தில் அவைதவழ் வடிவங்கள் எண்ணமிகும் தன்மை!
பூசனிப்பூ வாசல்கோல மத்தியில் மங்கலம் தரும் மகிமை!
சீலங்கள் கொடைதரும் வகையில்இது திங்கள்அதில் தனிமை!
வேதத்தில் புராணத்தில் சிலைஇது இடம்பெற்ற பெருமை!
கிருஷ்ணர் மாதங்களில் மார்கழிநான் என்றவாக்கு செம்மை!
மகிழ்ந்திருக்க புள்ளிவைத்த மார்கழிக் கோலங்கள் வளமை!
- மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.