முதுமையைப் போற்றுவோம்...! - 13

காய்ந்து விட்ட உடலோடு, கால்கள் மூன்றாகி நடக்கையில்
அப்போது அறிந்தேன் முதுமையை!
மனம் மட்டும் அங்கும் இங்குமாய்
மரம் விட்டு மரம் தாவும் குரங்காகிறது!
காலம்தான் எவ்வளவு குறுகியது
வீதியில் யாரோ பந்து விளையாடுகின்றனர்
புன்னகையோடு அவர்கள் எழுப்பும் குரல்கள்
காதுக்கு இனிமையாய் இருக்கின்றன.
இணைந்து விளையாட ஆசைப்படுகிறது இதயம்
முதுமை நினைவுக்கு வர ஆசை உயிரற்றுப் போனது
முதுமை என்பது முந்தைய அனுபவங்களின் மீட்புக்காலம் போலும்
பழைய அனுபவங்களெல்லாம் படங்களாய் ஓடுகின்றன.
இளமை இருக்கும் போதே
வினாடிகளை வீணாக்காது வாழ்ந்திருக்க வேண்டும்.
இளமைக் காலத்தின் வெறித்திமிரில்
உலகம் சிறியதாகத் தெரிந்தது.
தேவைகளை மதிக்கும் உலகில்
தேவையே இல்லாத ஒரு பொருளாகி
தவிர்க்க முடியாத அந்த விடுதலைக்காகத்
தயாராவதுதான் முதுமை போலும்.
முதுமையின் வாசலில் முதலடி வைக்கையில் தள்ளாட்டம்
என் மீது வெள்ளோட்டம் பார்க்கும் - புரிந்து கொள்க
என் முதுமை பார்த்து முகம் சுளிக்காதே,
நான் சாப்பிடுகையில் சாதம் சிந்திவிட்டேனா? சத்தம் போடாதே
உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டியதை நினைவு கொள்க
கடவுளின் வாசனையும், அதன் தெய்வீகமும்
அனுபவித்ததுண்டா நீங்கள்...?
மழலையின் பால் மணமும், முதுமையின் அனுபவமும்
சுகிக்காது தவிர்ப்பீர்... எனில் எந்தக் கோயிலும்
கிட்டாத கனவாய்ப் போகும்
முதுமையைப் போற்றுவோம்...!
முதியோர் இல்லங்களை இல்லாது செய்வோம்...!
- ம. சக்திவேல், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.