முதுமையைப் போற்றுவோம்...! - 14
வீட்டின் தூண் மட்டுமல்ல
இந்நாட்டின் விழுதும் முதுமையே
ஏக்கத்தின் மூச்சு மட்டுமல்ல
ஏற்றத்தின் தோற்றம் முதுமையே
அனுபவத்தில் மட்டுமல்ல
ஆற்றல் சக்தியின் ஆளுமை முதுமையே
எண்ணத்தில் மட்டுமல்ல
திண்ணமான செயல் சிற்பம் முதுமையே
கருவில் சுமந்த பிள்ளையை விட
உருவில் தனையொத்த பெயரக் குழந்தைகளை
பெரிதும் விரும்பும் முதுமை
குடும்பத்தின் தோல்விகளைக் களையெடுக்கும்
கடவுளின் மந்திரம் முதுமையே
பெற்றப்பிள்ளைகளின் ஒற்றுமை கண்டு
போற்றிக் களிக்கும் கார்மேகம் முதுமை
வாழ்வின் வசந்தம் நம் வழி வந்த சந்ததிகளே என
எண்ணும் விந்தை மனம் முதுமையே
பிள்ளையின் வாட்டத்தில் ஆதங்க ஆட்டம் காணும்
அற்புத விளக்கு முதுமையே
தென்றலின் சுகமாய் நாம் வென்றிட
வழி காட்டும் வாழும் கடவுள் முதுமையே
இம் முதுமையை சில சிறு உள்ளங்கள் உதறத் துடிக்கிறது
கதறிக் கடிக்கிறது, கல்லால் அடிக்கிறது
இவ்வடிகளும் இடிகளும் காலம் மாறிட
மீண்டும் நம்மைத் தீண்டும் என்பதை அறியாமையால்
இந்த மாய உலகினை மாற்றுவோம்
தூய முதுமையைப் போற்றுவோம்
- இரா. சரஸ்வதி, செல்லப் பிள்ளையார்குளம், திருநெல்வேலி மாவட்டம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.