முதுமையைப் போற்றுவோம்...! - 15

* இலைகளும் பூக்களும்
இளமையின் வெளிச்சத்தில்
கொண்டாட்டம்...
* மண்ணுக்குள் இருந்து
மறைபொருளாய் உயிரோட்டம் கொடுக்கும்
வேர்கள்தான் முதுமை
* ரிக்சா வண்டியில்
இளமை அமர்ந்திருக்க
முதுமை இழுத்துச் செல்லும்
குடும்ப பாரத்தின் கண்ணீர்
துடைக்க...
இளமையே அமர்ந்திடாதே...
கட்டித் தழுவிச் செல்
முதுமையை...
* பண்ணைக்காரன் வீட்டில்
முதுமை ஒன்று காளை மாடாய்
உழைக்கிறது...
கால் ஒடிந்துவிட்டால்
கடையாணி கழண்ட
சக்கரமாய் எங்கோ
ஓடிக்கிடக்கிறது...
எட்டிப்பார்ப்பார் யாருமில்லை
இனி கரம் பிடித்துப்
போற்றிடுவோம்...
* தந்தையின் வியர்வையில்
படித்து முடித்துவிட்டு
வெளிநாடு சென்றுவிட்டான்
இவர்களோ
அறிமுகம் ஆகாத
முதியோர் இல்லத்தில்
மகன் முகம் காண
தவித்திடும் முதுமை
பண வேட்டையை ஒழித்து
முதுமைப் பெற்றோரைப்
பொக்கிசமாய்ப் போற்றிட வேண்டாமா?
* பணக்காரக் கூட்டமெல்லாம்
நாட்டைக் குப்பை மேடாக்குகிறது
நல்ல குப்பை, கெட்ட குப்பை
என்று முதுமை நாட்டிற்கு
நாட்டியமாடுகிறது - நாம்
கையெடுத்துக் கும்பிடும்
கனவல்லவா இவர்கள்...!
* சுடுகாட்டில் பிணம் ஒன்று எரிய
முதுமை ஒன்று கடுந்தவம் புரிந்து
நாட்டைச் சுத்திகரிக்கும்
தேவன் அல்லவா?
* இளமையே
முதுமை பிறப்பின்
இறுதி வாயில்
மறந்து விடாதே!
போற்றிடுவோம்
வாழ்த்திடுவோம்
முதுமையை!
- த. சித்ரா, ஈச்சம்பூண்டி, கடலூர் மாவட்டம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.