முதுமையைப் போற்றுவோம்...! - 18
தாடி நரைத்து, தலைமுடியது வெளுத்து
ஓடியாடி உழைத்ததனால் உடல்நலிந்து
பெற்ற பிள்ளைகள் கற்றிட கனவு கண்டு
உற்றகடன்கள்தான் சுமந்துஉளவடைத்து
மருமகளைத்தேடி மகன்வாழ்வது சிறந்திட
வருங்கால வாரிசுகளை வாரியணைத்திட
பெயரன், பேத்திகளை அவர்கள் பெற்றிட
அயராது, அவர், நலம்பேணும் மூத்தோரை
தள்ளாமை, முதுமையில்தான் வருந்திடவே
தனியாக விட்டுவிடல் நன்றோ, நன்றன்று
எள்ளிநகையாடி இளக்காரம் ஏன்செய்வீர்
என்றென்றும் முதுமைக்கே முன்னுரிமை,
மனைவி சொற்கேட்டு அவரை மதியாமல்
மாபழியைஏற்றால் மறுசுழற்சி, வாராதோ
அனிச்சமலர்கள் அன்றோ அவர்கள் மனம்
அகம் வருந்த நோக்காதீர்அது பெரும்பாவம்
இளமையது எவர்க்கும் நிலையாமைதானே
இலையுதிர் காலம் போலதுவே திரும்புவதில்
முதுமையது எல்லோர்க்கும் பொதுமையது
மூத்தோரைப் போற்றிட நாம் முன்நிற்போம்
நாளை நமக்கும் அந்த முதுமை வருமதனால்
நம்பிள்ளை நம்முதுமைதனைக் கருதினாலும்
புதுமையல்ல புரிந்துணர்க ஆதலினால் நாம்
முதுமையைப் போற்றுவோம், முடிவெடுப்போம்
- பாவலர் தஞ்சை தர்மராஜன், செயிண்ட் லூயிஸ், அமெரிக்கா..
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.