முதுமையைப் போற்றுவோம்...! - 2
அடுக்கடுக்காய் வந்துதித்த துன்பம் போக்கி,
அடுத்தவர்கள் மகிழ்வுடனே வாழச் செய்தார்
குடும்பத்தின் இருளகற்றப் பாடு பட்டு
குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிரச் செய்தார்
துடுப்பாகத் தானிருந்து குடும்பத் தோணி
தொலைதூரம் செல்வதற்குத் துணைபு ரிந்தார்
இடும்பையெல்லாம் தான்சுமந்தே அண்டி யோர்க்கும்
ஏற்றமீந்த முதியோரைப் போற்று வோமே
தன்னலத்தைப் போற்றாது பிறர்க்காய் வாழ்ந்தார்
தானுண்ணாது பிறருண்ண விருப்பம் கொண்டார்
அன்புகாட்டி கருணைகாட்டி உழைப்பும் காட்டி,
அரும்புதல்வன் உயர்வதற்கு வழிவ குத்தார்
தன்சுகத்தைப் பெரிதாகப் பேணி டாமல்
தட்டையென உடல்மெலிந்து வலியி ழந்தார்
தின்பதையும் உண்பதையும் எண்ணி டாது
தீமைதனைக் களைந்திட்ட முதியோர் போற்று
நடைதளர்ந்து மேனிவாடி பேசு கின்ற
நாத்தளர்ந்து நோய்நொடிகள் சேர்ந்து வந்து
தடையில்லா நடுக்கமது விரைந்து வந்து
தாங்கவொண்ணா தனிமைவந்து பார்வை மங்கி
உடைமையென செவிடுமாகி மூச்சி ளைத்தும்
உதிரத்தை இயக்குகின்ற இதயம் சோர்ந்து
விடைபெற்றே இவ்வுலகைப் பிரியப் போகும்
மேன்மகனாம் முதியவரைப் போற்றிக் காப்போம்
- கவிஞர் கி. சுப்புராம், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.