முதுமையைப் போற்றுவோம்...! - 20
தொன்மையின் தொடராகித் தொடரின் தொகையாகி
எல்லையின் எல்லையாகி எல்லையின் எச்சமாகி
காலத்தின் கருவாகிக் கருவியின் களைப்பாகிப்
பட்டறிவின் பழமாகிப் பழத்தின் பாங்காகி
அறிவின் அமைவாகி அமைதியின் ஆளாகி
அந்நியம் அகமாகி அகத்தின் அந்நியமாகித்
தளர்வின் தளிராகித் தள்ளாமைத் தவிப்பாகித்
தோலின் தொய்வாகித் தோளின் துணையாகி
உறவின் உறவாகி உலகில் ஒரு தனியாகித்
துறப்பின் துப்பாகித் தூய்மையின் தூணாகி
இருப்பின் இருப்பாகி இயலாமை இன்னலாகி
மகளின் மகனாகி மண்டும் மகிழ்வாகி
நினைவின் நினைவாகி நில்லா நினைவாகிப்
பக்குவத்தின் பாங்காகிப் பாகின் பண்பாகி
மரத்தின் முதிர்வாகி முதிர்வின் முத்தாகி
மதிப்பின் மகிழ்வாகி மகிழ்விலா மதிப்பாகிச்
சுமையின் சுவையாகிச் சுவையின் சுமையாகி
ஓய்வின் ஓரமாகி ஓரத்தின் ஓய்வாகி
திறந்த வெளித் திறவாகித் திறவின் திறமாகிப்
பொலியும் பெரும்பொருளே போற்றி! போற்றி!!
- நா. நளினிதேவி, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.