முதுமையைப் போற்றுவோம்...! - 25
ஓடிக் களைத்து விட்ட
உடலுக்கு ஓய்வுதனை தேடுகின்ற
தெய்வ சுகம் முதுமையடா!
தெள்ளத் தெளிந்து
தெற்கு வடக்குதனை
முழுமையாக அறிந்திட்ட
முழுநிலவு முதுமையடா!
அங்கம் குறைந்து
ஆடை குறைந்து
ஆசை துறந்து
அன்புக்கு மட்டுமே ஏங்கும்
அறிவிலிகள் - முதுமையடா!
இது வாழ்வு இது இறுதி
இனியேது - என் உடலில்
நல்குருதி
எனவிருந்தும் - நற்செயலின்
காரியத்தான் - முதுமையடா!
நல்லதை மட்டுமே நாடும்
நல் மனது
கொண்டது போதும் எனச் சொல்லும்
பொன்மனது முதுமையடா!
முதிர்ந்த முதுமை
ஆயிரம் கனவுகளின் நிறம்
ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தம்
முதிர்ந்த பருவத்தின் பக்குவம்
முதுமையடா!
வாழ்வில் கரை கண்ட மனிதன்
நாளை தரைதட்டிப் போக
பறை எதிர்பார்க்கும் தெளிவான
மனதான் முதுமையடா!
அரைகுறை வாழ்க்கையல்ல
நிறை நிறை வாழ்ந்தவனின்
நிதானம்தான்
நிறைகுடமான முதுமையடா!
காப்போம் - கண்ணியமாக
ஏற்றுவோம் - முதியோர் தீபம்
காத்திடுவோம் - என்றும் அணையாது
போற்றிடுவோம் - முதுமையை!
- அ. பாண்டிய மகிழன், மேல்மங்கலம், தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.