முதுமையைப் போற்றுவோம்...! - 27
பட்டறிவு தந்த பாட்டன் பூட்டனை நாம்
விட்டுவிடலாமோ விட்டேற்றியாய்!
கற்றறிந்த மூடர் கணக்கின்றி உலவுகின்றார்
‘கற்றிலனாயினும் கேட்க’ என்றானே நம் மூத்தோன்...!
‘மூத்தோர் சொல் அமுதமென்று’
முறையாகத்தானே உரைத்துள்ளார். ஆதலினால்
முதுமையைப் போற்றுவோமே... நாமும், அந்த
முன்னத்தி ஏர் பின்னே நாம் செல்வோமே...!
கரடுமுரடான வாழ்க்கையைப் பாதையைக் கடக்க
கடவுளாலும் முடியாத காலமானதால் நாமோ
அனுபவப்பட்டு வழிநடந்த நம் மூத்தோரின்
அனுபவத்தைக் கண்டறிய அவர்களைப் போற்றுவோமே...!
சாத்திரம், சம்பிரதாயமென நம்மை வழிநடத்தி
சறுக்கல் இல்லாத வாழ்க்கைப் பாதையில் பயணிக்க
‘மூத்தகுடிமக்களாம்’ முதியோர் வாக்குப்படி
நேத்திரப்பார்வையை நேர்செயப் போற்றுவோமே...!
உடலால் தளர்ந்தும் மனதால் தளராதிருக்கும்
உறுதிமிகு மனம் கொண்டார் மனம் கோணாது
கடலெனும் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவும்
கலங்கரை விளக்காய் அவர்களைக் காப்போமே...!
நற்குடி பிறந்தார் என நாலுபேர் போற்றும்படி
நாலும் தெரிந்தவர் என ஞாலம் புகழும்படி
இப்புவியில் வாழும் இம்மையில் நன்மை செய்யும்
முதற்குடியாம் மூத்த முதுமயைப் போற்றுவோம்...!
- கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன், ஆண்டிபட்டி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.