முதுமையைப் போற்றுவோம்...! - 28
ஓடி ஆடி உழைத்து ஓய்ந்து
வாடி தளர்ந்த முதுமையைப் போற்றுவோம்
ஏட்டில் எழுத்தில் இனிக்கும் பேச்சில்
காட்டும் அக்கறை காட்டுவோம் உண்மையில்
வரும்படி இல்லா வயோதிக காலம்
ஒருவ ரேனும் மதிப்ப துண்டோ?
இருந்தால் பெரியவர் இல்லையேல் கிழடு
கரித்து கொட்டுவோம் கேட்டால் வதைப்போம்
உயிரெனும் மனைவியும் ஓரம் கட்டுவாள்
தயவால் மக்களைத் தலைமேல் வைப்பான்
முதுமை என்பது முடங்கிய சுமையோ?
விதியைச் சொல்லி வேதனைப் படவோ?
தன்வீட்டில் தானே தனிமை ஆகி
கண்ணீர் சிந்தும் கழிந்த நிலையே
அன்புக் கேங்கி அழுது புலம்பும்
தன்னைத் தானே தாழ்த்தி வருந்தும்
குழந்தை நிலையைக் கொண்டிருக்கும் மனது
குழந்தைபோல் அவரைக் காத்திட வேண்டும்
முதியோர் இல்லத்தே முடக்கிட வேண்டாம்
அதுதான் நாளை அறிவோம் நமக்கும்
முதியவர் அனுபவம் முழுமதி போலே
மதிப்பவர் வாழ்வு மலர்ந்து செழிக்கும்
முதியோரைப் போற்றுவோம் முதியோ(ரை) காப்போம்
கதியும் காவலும் குழந்தைகள் தானே
- பாப்பாக்குடி அ. முருகன்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.