முதுமையைப் போற்றுவோம்...! - 29
பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தவறிய அன்பை
பெற்றோருக்குச் செய்யத் தவறிய பணிவிடையை
மதிக்க மறந்த மனைவியின் மதியை
மன்னிக்க மறந்த மாப்பிள்ளையின் கிண்டலை
பாராட்ட மறந்த உறவுகளை
பகிர்ந்து கொள்ளாத சொந்தங்களை
சினத்தால் இழந்த நட்புகளை
சிந்திக்கத் தவறிய தருணங்களை
படிக்காத நூல்களை, பார்க்காத படங்களை
பேசாத அரசியலை, பொழுதுபோக்கும் சுகத்தை
நின்று நிதானமாகக் கண்டு உணராத
ஊரின் உருவத்தை
பாம்பென நீண்ட ஒத்தைப் பாதையை
பறந்து திரியும் பூச்சியைப் பறவைகளை
தொட்டு நுகராத செடி கொடிகளை
கண்டு மயங்காத வண்ணப்பூக்களை
காணத்தவறிய காட்டு மரங்களை
காலைச் சூரியப் புன்னகையை
மாலை மயக்கும் கதிர் மறைவை
கும்பிட நினைக்காத காளிதேவியை
குளக்கரைப் படித்துறைக் குப்பைகளை
மொத்தமாய் அத்தனையும் உணர்த்திய முதுமையே
நீதான் மனித வாழ்வின் முதுமையே!
- க. முத்துஇலக்குமி, பொள்ளாச்சி - 5.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.